கொரோனா தொற்று 2-வது அலை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரத்து படிப்படியாக குறைவு ஒரே நாளில் 18 விமானங்கள் ரத்து


கொரோனா தொற்று 2-வது அலை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரத்து படிப்படியாக குறைவு ஒரே நாளில் 18 விமானங்கள் ரத்து
x
தினத்தந்தி 15 April 2021 12:59 AM GMT (Updated: 15 April 2021 12:59 AM GMT)

கொரோனா தொற்று 2-வது அலை எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

ஆலந்தூர், 

நாடு முழுவதும் கொரோனா தொற்று 2-வது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னையை சுற்றி உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் மிகவும் அதிக அளவில் பொதுமக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மக்களிடையே பெரும்பீதி அச்சம் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வசிக்கும் வெளியூா்வாசிகள் குறிப்பாக வடமாநிலத்தவா்கள் பரவலாக தங்களுடைய சொந்த ஊா்களுக்கு திரும்ப தொடங்கி உள்ளனா். அதைப்போல் வெளியூா் வாசிகள் சென்னை நகருக்குள் வருகையும் வெகுவாக குறைந்து விட்டது.

கட்டுப்பாடுகள் காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை உள்நாட்டு முனையத்திற்கு வரும் விமானங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 15 ஆயிரம் போ் வந்தனா். தற்போது அதுபடிப்படியாக குறைந்து நேற்று சுமார் 5,500 போ் மட்டுமே வந்தனா்.

அதுபோல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஒரு நாளுக்கு 13 ஆயிரத்தில் இருந்து 14 ஆயிரம் போ் பயணித்தனா். ஆனால் நேற்று 6,500 போ் மட்டுமே பயணிக்கின்றனர்.

கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தற்போது அதே நிலைக்கு சென்னை விமானநிலையம் தள்ளப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் மிகவும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் பலா் விமான பயணங்களை பெருமளவு தவிர்ப்பதாக கூறப்படுகிறது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று பல விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் காலியாகவே இயக்கப்பட்டன. பெங்களூரில் இருந்து வந்த 2 விமானங்களில் 18 பயணிகளும், ராய்ப்பூரில் இருந்து வந்த விமானத்தில் 3 பயணிகளும், மங்களூா் மற்றும் கோவை விமானங்களில் தலா 5 பயணிகளும், கோழிக்கோட்டில் இருந்து வந்த விமானத்தில் 7 பயணிகளும், ஐதராபாத்தில் இருந்து வந்த விமானத்தில் 8 பயணிகளும், மைசூரில் இருந்து வந்த விமானத்தில் 9 பயணிகள் மட்டுமே பயணித்தனா்.

போதிய பயணிகள் இல்லாமல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு தலா 3 விமானங்களும், பெங்களூா், மதுரை, பாட்னா நகரங்களுக்கு தலா ஒரு விமானம் என 9 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அதுப்போல் சென்னைக்கு திரும்பி வரவேண்டிய 9 விமானங்கள் உள்பட 18 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து அதிகரித்து களைகட்ட தொடங்கியிருந்தது. தற்போது கொரோனா பரவாலால் மீண்டும் பயணிகள் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

Next Story