கொரோனா தொற்று பாதிப்பு அடுத்த 2 வாரங்கள் சவாலானவை; சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
வளசரவாக்கம் அடுத்த சின்ன போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நிருபர்களை சந்தித்த அவர் பேசும்போது, தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆயிரத்து 985 உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 18 ஆயிரத்து 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் முககவசம் அணியாது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை மீறியதாக 2 லட்சத்து 39 லட்சம் பேரிடம் ரூ.5.07 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு முதற்கட்டமாக 54 லட்சத்து 85 ஆயிரம் கொரோனா தடுப்பு ஊசி வந்துள்ளது. இதில் 40 லட்சத்து 99 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. வரக்கூடிய அடுத்த 2 வாரங்கள் கொரோனா தாக்கம் மிக வீரியமாக இருக்கும் என்பதால் தடுப்பு நடவடிக்கை நமக்கு சவாலானவை. முக கவசம் அணிவது, வெளியூர் பயணங்களை ரத்து செய்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமக்கள் ஒத்துழைப்பு நமக்கு தேவை. தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.