கொரோனா 2 வது அலையால் திருப்பூர், கோவை மாவட்டங்களில் ரூ.500 கோடி மதிப்புள்ள ஜவுளி துணிகள் தேக்கம் அடைந்துள்ளது
கொரோனா 2 வது அலையால் திருப்பூர், கோவை மாவட்டங்களில் ரூ.500 கோடி மதிப்புள்ள ஜவுளி துணிகள் தேக்கம் அடைந்துள்ளது
பல்லடம்
கொரோனா 2 வது அலையால் திருப்பூர், கோவை மாவட்டங்களில் ரூ.500 கோடி மதிப்புள்ள ஜவுளி துணிகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
தினசரி ரூ.40 கோடி உற்பத்தி
திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் மூலம் தினசரி ரூ.40 கோடி மதிப்புள்ள 1 கோடி மீட்டர் காடா ஜவுளி துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஜவுளித்தொழிலில் நேரடியாக 1 லட்சம் பேரும், மறைமுகமாக 4 லட்சம் பேரும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட விசைத்தறிதொழில் மெல்ல இயல்பு நிலைக்கு வரத் தொடங்கிய நிலையில் தற்போது கொரோனா 2-வது அலையினால், வட மாநில ஜவுளி வியாபாரிகள் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால் மீண்டும் காடா ஜவுளி துணிகள் தேக்கமடைந்துள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்திக்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா 2வது அலை
இதுகுறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது
திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக உள்ள விசைத்தறி ஜவுளித்தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த ஜவுளித்துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் நெருக்கடியை சந்தித்து வந்தது. இதனிடையே கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் முற்றிலும் முடங்கியது, இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் தளர்வுகள் அறிவிப்பால் சற்றே விசைத்தறி தொழில் சூடு பிடித்தது.
தற்போது சுமார் 80 சதவீத உற்பத்தியை நெருங்கிய வேளையில், கொரோனாவின் 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தமிழகத்தில் இருந்து ஜவுளிகள் அதிகமாக ஏற்றுமதியாகும் குஜராத், மராட்டியம், டெல்லி, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் கொரோனா உச்ச நிலையை அடைந்துள்ளது.
ஆர்டர்கள் நிறுத்தி வைப்பு
வடமாநில ஜவுளிவியாபாரிகள், ஏற்கனவே ஆர்டர் கொடுத்து தயார் நிலையில் உள்ள காடா துணிகளை அனுப்ப வேண்டாம் என்றும், புதிய ஆர்டர்களை நிறுத்தி வைத்தும், ஏற்கனவே ஆர்டர் கொடுத்து பெற்ற துணிகளுக்கு, இதுவரை பணம் அனுப்பாமலும் உள்ளனர். இதனால் ரூ.500 கோடி மதிப்புள்ள துணிகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு, ஜவுளி உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளோம். நூல் விலையும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் நூல் கொள்முதலை நிறுத்தி கையிருப்பில் உள்ள நூல்களை மட்டும் வைத்து உற்பத்தியை செய்வது என முடிவு செய்துள்ளோம். இதன்படி ஜவுளி உற்பத்தியாளர்கள் கையிருப்பில் உள்ள நூல்களின் மூலம் ஒரு வார காலத்திற்கு காடா துணி உற்பத்தி நடைபெறும். அதன் பின்னர் உற்பத்தியை நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. பின்னர் ஏற்படும் சூழ்நிலைக்கு தக்கவாறு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story