கோவிலில் 1½ கிலோ வெள்ளி கிரீடம் கொள்ளை


கோவிலில் 1½ கிலோ வெள்ளி கிரீடம் கொள்ளை
x
தினத்தந்தி 15 April 2021 6:50 PM GMT (Updated: 15 April 2021 6:50 PM GMT)

ஆரல்வாய்மொழியில் ஒரே நாளில் கோவில், வீட்டில் 1½ கிலோ வெள்ளி கிரீடம், 2 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி, 
ஆரல்வாய்மொழியில் ஒரே நாளில் கோவில், வீட்டில் 1½ கிலோ வெள்ளி கிரீடம், 2 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வெள்ளி கிரீடம் கொள்ளை
ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் கோட்டக்கரை மருந்துபுற இசக்கியம்மன் கோவில் உள்ளது.  கணேசன் என்பவர் பூசாரியாக உள்ளார். கோவிலில் தினமும் காலையில் பூஜை நடப்பது வழக்கம். 
நேற்று காலை கோவிலை சுத்தம் செய்ய கோவில் நிர்வாகி முருகன் சென்றபோது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ேள சென்று பார்த்தபோது, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த 1½ கிேலா வெள்ளி கிரீடம் மாயமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது. நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து வெள்ளி கிரீடத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 
பின்னர், இதுகுறித்து முருகன் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து பார்வையிட்டு விசாணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
 ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ஆன்றோ மரிய விஜய் (வயது 41). இவருடைய மனைவி எட்வின் டாப்னி. ஆன்றோ மரிய விஜய் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால், எட்வின் டாப்னி ராமன்புதூரில் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஆரல்வாய்மொழியில் உள்ள வீட்டை ஆன்றோ மரிய விஜய்யின் தாயார் சுந்தரி பராமரித்து வந்தார்.
நேற்று காலையில் சுந்தரி, அந்த வீட்டுக்கு சென்றபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், பீரோவில் இருந்த 2 பவுன் நகை, கையெழுத்து போடப்பட்ட 2 காசோலைகள், டி.வி. ஆகியவை மாயமாகி இருந்தன. பின்னர், இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.
ஒரே நாளில் கோவில், வீட்டில் வெள்ளி கிரீடம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆரல்வாய்மொழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story