கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விடுபட வேண்டி சேலத்தில் தீச்சட்டி ஏந்தி திருநங்கைகள் பூஜை
கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விடுபட வேண்டி சேலத்தில் தீச்சட்டி ஏந்தி திருநங்கைகள் பூஜையில் ஈடுபட்டனர்.
சேலம்:
கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விடுபட வேண்டி சேலத்தில் தீச்சட்டி ஏந்தி திருநங்கைகள் பூஜையில் ஈடுபட்டனர்.
தீச்சட்டி ஏந்தி பூஜை
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், கொரோனா நோய் முற்றிலும் ஒழிய வேண்டியும், கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும் சேலத்தில் திருநங்கைகள் தீச்சட்டி ஏந்தி சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.
சேலம் செவ்வாய்பேட்டை அடுத்த சந்தைப்பேட்டை பகுதியில் நவகிரக பெரியாண்டிச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று மாலை ஏராளமான திருநங்கைகள் வந்தனர். பின்னர் அவர்கள் கொரோனா நோயில் இருந்து மக்கள் விடுபட வேண்டி தீச்சட்டி ஏந்தி அம்மனை சுற்றி வலம் வந்து சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். அப்போது, கொரோனா என்னும் உயிர்கொல்லி நோய் இந்த உலகத்தை விட்டு ஓட வேண்டும் என்று அம்மனை வேண்டிக்கொண்டனர். முன்னதாக திருநங்கைகள் அனைவரும் ஏப்ரல் 15-ந் தேதி தேசிய திருநங்கைகள் தினமாக கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
தேர்தலில் போட்டியிட...
இதுகுறித்து சேலம் திருநங்கைகள் நலச்சங்க தலைவி பூஜா கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதியை தேசிய திருநங்கைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். ஆனால் இதுவரை காலண்டர் தேதியில் குறிப்பிடவில்லை. எனவே, மற்ற நாட்களை போல் காலண்டரில் தேசிய திருநங்கைகள் தினம் என்று அச்சிடப்பட வேண்டும். அதேபோல், வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் மூன்றாம் பாலினம் என்று இருந்தும், வாக்காளர் அடையாள அட்டையில் பெண் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதை மாற்ற வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் திருநங்கைகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். அதாவது, உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தலில் திருநங்கைகள் போட்டியிட ஏதுவாக வார்டுகள் மற்றும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story