மொட்டை மாடியில் தூங்கியபோது மர்மநபர்கள் துணிகரம்: என்ஜினீயர் வீட்டில் 35 பவுன் தங்க, வைர நகைகள் திருட்டு


மொட்டை மாடியில் தூங்கியபோது மர்மநபர்கள் துணிகரம்: என்ஜினீயர் வீட்டில் 35 பவுன் தங்க, வைர நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 16 April 2021 2:16 AM GMT (Updated: 16 April 2021 2:16 AM GMT)

காற்றுக்காக வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிய என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க, வைர நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த நங்கநல்லூர் 37-வது தெருவைச் சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 58). இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

நங்கநல்லூர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் காற்றுக்காக குடும்பத்துடன் வீட்டின் மொட்டை மாடியில் படுப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் விவேகானந்தன் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் மொட்டை மாடியில் சென்று தூங்கினார்.

நேற்று காலை எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் தங்க, வைர நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், நகைகளை திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story