அரசு ஆஸ்பத்திரிகளில் 780 படுக்கைகள் தயார்


அரசு ஆஸ்பத்திரிகளில் 780 படுக்கைகள் தயார்
x
தினத்தந்தி 16 April 2021 8:20 PM GMT (Updated: 16 April 2021 8:20 PM GMT)

கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 780 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக கண்காணிப்பு அதிகாரி மதுமதி தெரிவித்தார்.

விருதுநகர், 
 கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 780 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக கண்காணிப்பு அதிகாரி மதுமதி தெரிவித்தார்.
 அதிகாரிகளுடன் ஆய்வு 
மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரியான மாநில சமூக நலத்துறை செயலாளர் மதுமதி நேற்று மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விருதுநகர் வந்தார்.
 அவர் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். கலெக்டர் கண்ணன் முன்னிலையில் நடந்த இந்த ஆய்வின்போது மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். மேலும் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு துறை அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது குறித்தும் வலியுறுத்தினார்.
பேட்டி 
இதையடுத்து சிறப்பு கண்காணிப்பு அதிகாரி மதுமதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு மையங்களுக்கு சென்று நேரடியாக ஆய்வு செய்தேன்.
 அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தடுப்பூசி போடப்படும் மையங்கள் மற்றும் நோய் தடுப்பு சேவை மையங்கள் ஆகியவற்றுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டேன். மாவட்ட நிர்வாகம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளது.
தயார்நிலை 
மாவட்டத்தில் உள்ள ஏழு அரசு ஆஸ்பத்திரிகளில் 780 படுக்கைகள் கொரோனா பாதிப்படைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளது.
 மேலும் இது தவிர சிகிச்சை மையங்களிலும் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. எனவே நோய் பாதிப்படைந்தவர்களுக்கு எந்த நேரத்திலும் உரிய சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று வரை 365 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 88 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி 
 63 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 35 பேர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 இது தவிர 179 பேர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 95 மையங்களில் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 35 மையங்கள் நிரந்தர மையங்கள் ஆகும். இது வரை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 451 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
இதில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 452 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள். மீதமுள்ளோர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்.
தற்போதுள்ள நிலையில் மாவட்டத்தில் தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு இல்லை. முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் இருந்து மாவட்டத்தில் ரூ.30 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வேர் சிகிச்சை 
மாவட்டத்தில் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்பிற்கு சித்த மருத்துவத்துறையின் சார்பில் மோடி வேர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  கொரோனா பரவலை தடுக்க  மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
 இவ்வாறு அவர் கூறினார்.  
முன்னதாக நடந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், மாவட்ட திட்ட அதிகாரி ஜெயக்குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story