பிரேத பரிசோதனையில் தொழிலாளியின் உடலை மாற்றிக்கொடுத்ததால் பரபரப்பு


பிரேத பரிசோதனையில் தொழிலாளியின் உடலை மாற்றிக்கொடுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 April 2021 5:43 PM GMT (Updated: 2021-04-19T23:13:57+05:30)

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனையின்போது தொழிலாளியின் உடலை மாற்றிக்கொடுத்ததால் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

ஆண்டிப்பட்டி: 

செருப்பு தைக்கும் தொழிலாளி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் அய்யாவு (வயது 71). அவருடைய மனைவி காமாட்சி. அய்யாவு, வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார்.

கடந்த 16-ந் தேதி உடல்நிலை சரியில்லாமல் வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் அய்யாவு மயங்கி விழுந்தார். 

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு. சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலையில் அவர் இறந்தார்.

உறவினர்கள் அதிர்ச்சி
இதனையடுத்து அய்யாவு உடல், பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக கடிதம் வாங்கி வர வேண்டும்.

இதற்காக அய்யாவுவின் உறவினர்கள், வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் சென்றனர். அங்கிருந்து போலீசாரும், உறவினர்களும் மீண்டும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறைக்கு வந்தனர்.

அப்போது அங்கு அய்யாவுவின் உடல் இல்லை. அவருடைய உடலுக்கு பதில் வேறு ஒரு முதியவரின் உடல் இருந்தது. இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

போலீஸ் நிலையம் முற்றுகை
இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது உடல் மாறி விட்டதும், தற்கொலை செய்த முதியவர் உடலுக்கு பதில் அய்யாவு உடலை பிரேத பரிசோதனை செய்து அனுப்பியதும் தெரியவந்தது.


இதனால் ஆத்திரம் அடைந்த அய்யாவுவின் உறவினர்கள், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். 

தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்தனர். 
இதையடுத்து அவர்கள் மறியல் முயற்சியை கைவிட்டு, க.விலக்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடல் தகனம்
சம்பவ இடத்துக்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன் விரைந்தார். 

பின்னர் அவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உடல் மாறி போனதற்கான காரணம் குறித்து அவர் விசாரித்தார்.

விசாரணையில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பெரியகுளம் அருகே உள்ள இ.புதூர் கிராமத்தை சேர்ந்த ராமு (75) என்பவரின் உடலுக்கு பதில் அய்யாவுவின் உடலை பிரேத பரிசோதனை செய்து மருத்துவமனை ஊழியர்கள் அனுப்பி வைத்துள்ளனர். 

இதை அறியாமல் ராமுவின் உறவினர்கள் உடலை வாங்கிக் கொண்டு பெரியகுளத்தில் நேற்று முன்தினம் தகனம் செய்தது தெரியவந்தது.  

அலட்சியம்
இந்த தகவலை அறிந்ததும் அய்யாவு உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் போலீசாரின் அலட்சியத்தால் அவருக்கு இறுதிக் காரியங்கள் கூட செய்ய முடியாமல் போய்விட்டதே என கதறி அழுதனர்.
  
போலீசார் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள், தகனம் செய்யப்பட்ட உடலின் அஸ்தியை பெற்றுக் கொள்வதாகவும், பிரேத பரிசோதனையில் உடல் மாறியதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதனும், போலீஸ் துறை தரப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story