அழகர் கோவிலில் திருக்கல்யாணம்


அழகர் கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 19 April 2021 7:45 PM GMT (Updated: 2021-04-20T01:15:29+05:30)

தென்னம்பாக்கம் அழகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் எளிய முறையில நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

நெல்லிக்குப்பம், 

கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற அழகு முத்து அய்யனார் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாதம் முதல் திங்கட்கிழமை  அன்று சித்திரை திருவிழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறும். இந்த வருடம் கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக சித்திரை திருவிழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறாது என்றும், கெரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் எளிய முறையில் கோவிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை பூரணி, பொற்கலை, அழகு முத்து அய்யனார் ஆகிய சாமி சிலைகளுக்கு புதிய வர்ணம் பூசப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஹோமம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. 

திருக்கல்யாணம்

பின்னர் அழகு முத்து அய்யனார் பொற்கலை மற்றும் பூரணி ஆகிய உற்சவ சாமிகளுக்கு திருக்கல்யாணம் எளிய முறையில் நடைபெற்றது. 
இதில் அமைச்சர் எம்.சி.சம்பத், மனைவி தமிழ்வாணி சம்பத், தென்னம்பாக்கம் மகேஷ், ஒப்பந்ததாரர் ஜோதி, கோவில் செயல் அலுவலர் மகாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

அனுமதி மறுப்பு

இதற்கிடையே நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வரத் தொடங்கினர். அப்போது அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் தடுத்து கோவில் முன்புள்ள ஆர்ச் கேட் வரை மட்டும் செல்ல அனுமதித்தனர். கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய யாரையும் அனுமதிக்கவில்லை.
மேலும் முககவசம் அணியாமல் வந்தபக்தர்களுக்கு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி முககவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்.

Next Story