வாக்கு எண்ணும் மையம் அருகில் நின்ற கன்டெய்னர் லாரி

விருத்தாசலத்தில் வாக்கு எண்ணும் மையம் அருகில் கன்டெய்னர் லாரி நின்றது. இதனால் அங்கு அரசியல் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 6-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குகள் பதிவானது. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு, அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்படுகிறது. இங்கு வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
கன்டெய்னர் லாரியால் சந்தேகம்
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் ஒரு கன்டெய்னர் லாரி, விருத்தாசலம் ஜங்சன் சாலையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தின் அருகில் வந்து நின்றது. ஆனால் அந்த லாரி இரவு 8 மணியை கடந்தபோதிலும் அதே இடத்தில் நின்றது.
சில வாக்கு எண்ணும் மையங்களில் இதுபோன்று சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் கன்டெய்னர் லாரி இங்கு வந்தது தி.மு.க., காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க. கட்சியினருக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.
பரபரப்பு
இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கன்டெய்னர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருப்பூரில் இருந்து சென்னைக்கு தேங்காய் நார் ஏற்றி வந்ததும், லாரி டிரைவர் விருத்தாசலத்தை சேர்ந்தவர் என்பதால் வாக்கு எண்ணும் மையம் அருகில் கன்டெய்னர் லாரியை நிறுத்தி் விட்டு, அதன் டிரைவர் தனது வீட்டிற்கு சென்றதும் தெரியவந்தது. போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து டிரைவர், கன்டெய்னர் லாரியை சென்னைக்கு ஓட்டிச்சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story