ஊரப்பாக்கம் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கல்லூரி பேராசிரியர் பலி


ஊரப்பாக்கம் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கல்லூரி பேராசிரியர் பலி
x
தினத்தந்தி 20 April 2021 1:01 AM GMT (Updated: 2021-04-20T06:31:04+05:30)

ஊரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பலியானார்.

வண்டலூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள மாடம்பாக்கம் சந்தோஷ் கார்டன், ஸ்கூல் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 37). இவர் குரோம்பேட்டை அருகே உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழகத்திற்கு சென்று கொண்டிருந்தார். ஊரப்பாக்கம் அருகே செல்லும் போது, சாலையில் குறுக்கே 2 பெண்கள் வந்த நிலையில், மோட்டார் சைக்கிள் மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. அப்போது பின்னால் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அசோக்குமார் பலத்த படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்துபோன அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மற்றொரு விபத்து

அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மணிமேகலை தெருவை சேர்ந்தவர் கவுதம் (27), டிரைவர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் மாடம்பாக்கம் மேம்பாலத்தில் செல்லும்போது, மேம்பாலம் சுவரில் மோதியதில் கீழே விழுந்து படுகாயமடைந்த கவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story