கொடுங்கையூரில் இரும்பு கம்பியால் அடித்து தொழிலாளி கொலை


கொடுங்கையூரில் இரும்பு கம்பியால் அடித்து தொழிலாளி கொலை
x

கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி எலிசபெத் ராணி, பிரிந்து சென்றுவிட்டார்.

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர், காமராஜர் சாலையை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 42). இவர், அதே பகுதியில் சொந்தமாக ‘வாட்டர் சர்வீஸ்’ செய்யும் தொழில் செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி எலிசபெத் ராணி, பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு ராஜ்குமார், தாய் சுமதியுடன் வசித்து வந்தார். குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்ததால் சுமதி, அருகில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கிவிட்டார். இதனால் தனியாக இருந்த ராஜ்குமாருக்கு மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரும் பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து படுத்தார். ஆனால் நேற்று மதியம் வரை அவர் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு ரத்த வெள்ளத்தில் தனது மகன் ராஜ்குமார், படுக்கையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Next Story