திருப்பத்தூர் மாவட்டத்தில் 4-வது நாளாக கொரோனா தடுப்பு ஊசி இல்லை. பொதுமக்கள் வாக்குவாதம்


திருப்பத்தூர் மாவட்டத்தில் 4-வது நாளாக கொரோனா தடுப்பு ஊசி இல்லை. பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 20 April 2021 1:55 PM GMT (Updated: 2021-04-20T19:25:48+05:30)

திருப்பத்தூர் மாவட்டத்்தில் 4-வது நாளாக கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கும்- ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருப்பத்தூர்

கொரோனா தடுப்பூசி

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 103 பேருக்கும் நேற்று 87 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 4.5 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 50 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர்.

இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஊசி இருப்பு இல்லை. நேற்று 4-வது நாளாக கொரோனா தடுப்பூசி போட சென்றவர்கள் இருப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதனால் பொதுமக்கள் பல இடங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தடுப்பூசி திருவிழா

இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில் கூறியதாவது திருப்பத்தூர் மாவட்டத்தில் தடுப்பூசி திருவிழா நடத்தி கையிலிருந்த கொரோனா தடுப்பூசிமருந்துகள் அனைத்தும் போடப்பட்டு விட்டது.

தமிழக அரசிடமிருந்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 2 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் கேட்டுள்ளோம் வந்தவுடன் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தார். 

அருகிலுள்ள வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி கையிருப்பு உள்ளதாகவும் திருப்பத்தூர் மாவட்டத்தில் குறைந்த அளவு தடுப்பூசி ஊசி கொடுக்கப்பட்டதால் உடனடியாக காலியாகி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story