கொரோனா தொற்று அதிகரிப்பு சென்னையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும்
கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து சென்னையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சென்னையில் கொரோனா தொற்று பரவல் நாள்தோறும் அதிகரித்து வருவதையடுத்து, தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம்-குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமையில் கள ஒருங்கிணைப்பு குழு அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஹர்மந்தர் சிங் பேசியதாவது:-
சென்னையில் தினந்தோறும் மேற்கொள்ளப்படும் 12 ஆயிரம் முதல் 16 வரையிலான கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை 25 ஆயிரமாக உயர்த்த வேண்டும். மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 30 தடவல் சேகரிப்பு மையங்கள், நடமாடும் தடவல் சேகரிப்பு மையங்களையும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தனியார் டாக்டர்களை அணுகும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுள்ள நபர்களை மாநகராட்சியின் இந்த மையங்களில் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
ரூ.3.95 கோடி அபராதம்
தினந்தோறும் 200 வார்டுகளிலும் தலா 2 காய்ச்சல் முகாம்கள் வீதம் 400 முகாம்கள் நடத்தி, பாதிக்கப்பட்ட நபர்களை முதற்கட்ட உடற்பரிசோதனை செய்யும் மையங்களுக்கு அழைத்து செல்ல வாகன வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். 15 கொரோனா பாதுகாப்பு மையங்களில் 12 ஆயிரம் படுக்கைகளை தயார்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகள்தோறும் சென்று கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளும் களப்பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு முககவசம் அணிதல் போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிட வேண்டும். அரசின் வழிமுறைகளை பின்பற்றாத தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது அபராதம் விதித்தல், சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதுவரையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.3.95 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், இணை கமிஷனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ், துணை கமிஷனர் ஜெ.மேகநாத ரெட்டி, மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள 15 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், மாநகராட்சி மருத்துவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story