கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தகவல்


கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தகவல்
x
தினத்தந்தி 22 April 2021 5:40 AM IST (Updated: 22 April 2021 5:40 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்தார்.

ஆலந்தூர், 

சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழக விடுதியில் பெருங்குடி மண்டலத்தின் சார்பில் 900 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள 13-வது கொரோனா பாதுகாப்பு மையத்தை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் திறந்து வைத்தார்.

பின்னர் அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்த அவர், அதன்பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் 147 ஆரம்ப சுகாதார மையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தெருக்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் தலா 2 இடங்களில் நிரந்தர கொரோனா பரிசோதனை கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் இங்கு நேரிடையாக சென்று சோதனைக்கு உட்படுத்தி கொள்ளலாம்.

25 ஆயிரம் படுக்கை வசதி

கொரோனா தொற்று ஏற்பட்டு 65 சதவீதம் பேர் அறிகுறி இல்லாமல் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் டாக்டர் கண்காணிப்பில் உள்ளனர். இது போன்றவர்களுக்காக 15 மண்டலங்களிலும் கொரோனா பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தனியார் கல்லூரிகள் உள்பட 14 மையங்களில் 12,600 படுக்கை வசதிகளுடன் கெரோனா மையம் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 1,719 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 10 ஆயிரம் படுக்கை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இன்னும் ஒரு வாரத்தில் 25 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரோனா மையம் ஏற்படுத்தப்படும். தரமான மருத்துவம், உணவு, ஓய்வு போன்ற வசதிகளும் இங்கு செய்து தரப்பட உள்ளது.

தனியார் அமைப்புகள், தனியார் ஓட்டல்கள் போன்றவற்றில் உரிய மருத்துவ வசதிகளுடன் கொரோனா மையங்கள் அமைக்கவும் அனுமதிப்படுகின்றனர்.

100 சதவீதம் பாதுகாப்பு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 28,005 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தடுப்பூசி 100-க்கு 100 சதவீதம் பாதுகாப்பானது. தடுப்பூசி குறித்து எந்த குழப்பமும் அடைய வேண்டாம். இதுவரை 13 லட்சம் பேருக்கு மேல் போடப்பட்டு உள்ளது. பொது சுகாதார துறைக்கு தற்போது 2 லட்சம் டோஸ் வழங்கப்பட்டு உள்ளது.

இன்னும் 10 நாளில் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். மே 1-ந்தேதிக்கு பிறகு 18 வயது நிரம்பியவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாகவும், தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.250-க்கும் தடுப்பூசி போடப்படுகிறது. எந்தவித அச்சமும் இல்லாமல் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story