மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேருக்கு கொரோனா


மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 April 2021 7:05 PM IST (Updated: 23 April 2021 7:05 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: 

வாக்கு எண்ணும் மையம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. 

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 2 ஆயிரத்து 673 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. 

இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.


வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் இவை அனைத்தும் சட்டமன்ற தொகுதி வாரியாக திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 

வாக்கு எண்ணும் மையம் மற்றும் கல்லூரி வளாகம் ஆகியவற்றுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

2 பேருக்கு கொரோனா
மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், துணை ராணுவத்தினர், போலீசார் என 300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் கல்லூரி வளாகம், வாக்கு எண்ணும் மையம் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 70-க்கும் மேற்பட்டோர் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 அவர்களில் பீகார் மாநிலத்தில் இருந்து வந்த 2 வீரர்களுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்தது. 

இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார், தேர்தல் அலுவலர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

Next Story