காஞ்சீபுரம் மாவட்டத்தில் தினந்தோறும் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் தினந்தோறும் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அனைத்து தடுப்பு பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இது குறித்து குழுத்தலைவர்கள், மண்டல அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது:-
பெருகி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தனிநபர் ஒவ்வொருவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு நன்றாக கைகளை கழுவ வேண்டும். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தனிநபர் இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாலுகா அளவில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி மற்றும் போலீஸ் துறை உள்ளடங்கிய சிறப்பு குழுக்கள் அமைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் கண்காணித்து வருகிறது.
சுகாதாரத்துறை சார்பில் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வரும் நாட்களில தினந்தோறும் 7 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடும் சந்தை பகுதிகள், பல்பொருள் அங்காடி மற்றும் ஜவுளிக்கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மக்களும் தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (விமான நிலையம் விரிவுபடுத்துதல்) கே.மணிவண்ணன், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) காஞ்சீபுரம் எம்.நாராயணன், சிறப்பு வருவாய் அலுவலர் (சிப்காட்) ஏ.ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) ஜீவா, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பழனி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story