காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு - கலெக்டர் தலைமையில் நடந்தது


காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு - கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 25 April 2021 6:11 PM IST (Updated: 25 April 2021 6:11 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறுகையில்:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் காரைபேட்டை பகுதியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைகழக என்ஜினீயரிங் கல்லூரியில் வருகிற 2-ந்தேதி எண்ணப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் 4 சட்டமன்ற தொகுதிக்களுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர், 134 வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், 134 வாக்கு எண்ணும் உதவியாளர்கள் மற்றும் 134 நுண்பார்வையாளர்களுக்கு கொரோனா கட்டுபாட்டு வழிமுறைகளை பின்பற்றி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு 2-ந்தேதி எந்த மேஜையில் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து காலை 5 மணியளவில் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

அதன்பின் எந்த மேஜையில் எந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணப்பட வேண்டும் என்பது குறித்தும் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். ஆகையால் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் காலை 6 மணிக்குள்ளாக தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை கூடத்திற்கு வருகை தர வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் மேஜையில் ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் மற்றும் ஒரு நுண்பார்வையாளரும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் நாளன்று காலை வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் திறக்கப்பட்டு அங்கிருந்து வாக்குகள் எண்ணப்படும் மேஜைக்கு கொண்டுவரப்படுவது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணும் அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் முதல் இறுதி வரை தமக்கு ஒதுக்கப்பட்ட மேஜையை தவிர்த்து வேறு எங்கும் செல்லக்கூடாது.

மேஜையின் மீது ஒவ்வொரு சுற்று வாரியாக வழங்கப்படவுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான வாக்குச்சாவடி எண் அடங்கிய விவரங்கள் வழங்கப்படும். வாக்கு எண்ணிக்கையின்போது தங்களுக்கு வழங்கப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதுதானா என்று உறுதி செய்ய வேண்டும்.

வாக்கு எண்ணிக்கைக்கான பட்டனை அழுத்தியவுடன் முகவர்கள் காணும் வகையில் கட்டுப்பாட்டு கருவியை வைத்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டு கருவியில் வரும் முடிவுகளை 2 பிரதிகள் தயாரித்து அதில் முகவர்களிடம் கையொப்பம் பெற வேண்டும். வாக்கு எண்ணிக்கை குறிக்கப்பட்ட இரு பிரதிகளையும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கிட வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் அதன் பிரதியை எடுத்து வேட்பாளரின் முகவர்களுக்கு வழங்கிட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையின்போது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதனை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உடனடியாக தெரிவித்திட வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயிற்சி வகுப்பில் காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை), காஞ்சீபுரம் எம்.நாராயணன், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சிப்காட் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story