முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மாமல்லபுரம் தடையை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
முழு ஊரடங்கால் வாகன போக்குவரத்தின்றி மாமல்லபுரம் வெறிச்சோடியது. கிழக்கு கடற்கரை சாலையில் தடையை மீறி ஊர் சுற்றியவர்களின் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மாமல்லபுரம்,
தமிழகத்தில் 2-வது அலை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் தமிழக அரசு ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. நேற்று முழு ஊரடங்கையொட்டி சென்னை- புதுச்சேரி செல்லும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மாமல்லபுரம் புறவழிச்சாலையில் பல்லவன் சிலை அருகில் செங்கல்பட்டு மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் ஊர் சுற்றிய நபர்களை மடக்கி பிடித்தனர்.
இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
அவர்களின் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். இரு சக்கர வாகனத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள், ஓட்டல் பணிக்கு செல்பவர்களை அனுமதித்தனர். இ.பாஸ் அனுமதியுடன் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் கார், வேன், லாரி போன்ற வாகனங்கள் மட்டும் இ.சி.ஆர். சாலையில் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
அதேபோல் மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து தெருக்களும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, அாச்சுனன் தபசு சாலை உள்ளிட்ட இடங்களில் சிற்ப கூடங்கள் மற்றும் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
மீன்பிடி தடைக்காலம்
புராதன சின்னங்கள் உள்ள இடங்கள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாமல்லபுரம் கடற்கரை பகுதியும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நிலையில் இருந்தது.
தற்போது மீன்பிடி தடைக்காலம் ஒரு புறம் இருந்தாலும் ஊரடங்கு விதிகளை கடைபிடிக்கும் வகையில் மீனவர்கள் பெரும்பாலானோர் கடற்கரை பகுதிகளுக்கு வராததால் மாமல்லபுரம் மீனவர் கடற்கரை பகுதியும் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. குறிப்பாக நேற்று காலையில் கடற்கரை பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களின் கூட்டமும் காணப்படவில்லை.
மாமல்லபுரத்தில் ஊரடங்கால் பொதுமக்கள் பெரும்பாலானோர் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். ஊரடங்கால் நேற்று இறைச்சிக்கடைகள், மீன் கடைகள் இயங்காததால் அசைவ பிரியர்கள் பலர் பரிதவிப்புக்கு ஆளானார்கள்.
Related Tags :
Next Story