வார இறுதிநாள் முழு ஊரடங்கு எதிரொலி: திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடின


வார இறுதிநாள் முழு ஊரடங்கு எதிரொலி: திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 26 April 2021 6:27 AM GMT (Updated: 26 April 2021 6:27 AM GMT)

திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் வார இறுதிநாள் முழு ஊரடங்கையொட்டி, முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடின. காரணமின்றி ஊர்சுற்றிய வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

பள்ளிப்பட்டு

திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் வார இறுதிநாள் முழு ஊரடங்கையொட்டி, முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடின. காரணமின்றி ஊர்சுற்றிய வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. அதை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக தமிழகத்தில் கடந்த 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இரவு நேர ஊரடங்கு உத்தரவு விடப்பட்டுள்ள அதேவேளையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, வார இறுதி நாள் ஊரடங்கையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி முழுவதும் காலை முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பஸ், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. இதனால் மக்கள் நடமாட்டமின்றி திருத்தணி நகரத்தின் அனைத்து தெருக்களும், சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

திருத்தணியில் காரணமின்றி இருசக்கர வாகனங்களில் வலம் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

வெறிச்சோடிய சாலைகள்

திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஏற்கனவே அனுமதி பெற்ற 17 திருமணங்கள் நேற்று நடைபெற்றன. இதில் குறைந்த அளவு உறவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் பள்ளிப்பட்டு பகுதியிலும் காலை முதல் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டன. கடைகள் ஏதும் திறக்கப்படாததால் பள்ளிப்பட்டு பஜார் உள்ளிட்ட, பள்ளிப்பட்டு நகரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.மேலும் பள்ளிப்பட்டு-ஆந்திர மாநில நகர எல்லையில் போலீசார் கண்காணித்து ஆந்திர மாநிலத்திலிருந்து பள்ளிப்பட்டு நகருக்குள் வர முயன்றவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர். முழு ஊரடங்கால் பள்ளிப்பட்டு பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின்பேரில் , திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன் தலைமையில் போலீசார் திருவள்ளூர் ஜெ.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, பஜார் வீதி போன்ற பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

முழு ஊரடங்கு காரணமாக பயணிகள் இல்லாததால் திருவள்ளூர் பஸ் நிலையம் வெறிச்சோடியது. அதேபோல மணவாளநகர், ஒண்டிகுப்பம், பட்டரை, திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், கூவம், குமாரச்சேரி, இருளஞ்சேரி, மப்பேடு, பண்ணூர், செவ்வாப்பேட்டை, பெருமாள்பட்டு, திருமழிசை, வெள்ளவேடு போன்ற பகுதிகளிலும் நேற்று ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டையில் முழுஊரடங்கையொட்டிஅனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மருந்து கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் மற்றும் இயங்கின. துணை போலீஸ் கண்காணிப்பாளர் சாரதி தலைமையில் போலீசார் அதிகாலை முதல் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தேவையில்லாமல் ஊர் சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். முழு ஊரடங்கு காரணமாக எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் நேரு பஜார் சாலை, திருவள்ளூர் ரோடு, நாகலாபுரம் ரோடு, சத்தியவேடு ரோடு, அண்ணா சிலை நான்கு ரோடு சந்திப்பு பகுதி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.வார இறுதிநாள் முழு ஊரடங்கு எதிரொலி: திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடின


Next Story