தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: ‘‘2-வது டோஸ் தடுப்பூசி எங்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்’’


தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: ‘‘2-வது டோஸ் தடுப்பூசி எங்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்’’
x
தினத்தந்தி 28 April 2021 7:58 AM IST (Updated: 28 April 2021 7:58 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும், கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் எங்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை, 

எல்லா மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 7 லட்சம் கொரோனா தடுப்பூசி ‘டோஸ்’கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. தினசரி சராசரியாக 1.15 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. எனவே இப்போதுள்ள இருப்பை கொண்டு 6 நாட்கள் சமாளித்துவிடலாம். தொடர்ந்து தடுப்பூசி மருந்து ‘டோஸ்’களை பெற முயற்சி மேற்கொண்டுள்ளோம். எனவே தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட வாய்ப்பு இல்லை.

‘2-வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கு தடை எதுவும் சொல்லக்கூடாது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’, என்பதை அரசு தெளிவு படுத்தியுள்ளது. எனவே கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் எதுவாக இருந்தாலும், எங்கு வேண்டுமானாலும் 2-வது டோஸ் போட்டுக்கொள்ளலாம். உருமாறிய கொரோனாவின் நுழைவுவாயில் எது? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து தான் உருமாறிய கொரோனா பரவியது என்பது கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனாவையும் தடுப்பூசி மருந்து டோஸ் கட்டுப்படுத்தும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வே முக்கியம்

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் இருப்பு நிலவரம் மோசமாக உள்ளது என்று கூற முடியாது. எனினும் அடுத்து வரும் நாட்களில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்க கூடும். இதன் காரணமாக ஆக்சிஜன் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொரோனா சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகும் கூட பலர் லங் பைப்ரோஸிஸ் எனும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

முழு குணமடையும் வரை அவர்களுக்கு கால்சியம் தேவைப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களின் நன்மைக்காகத்தான் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்பதை உணர்ந்து, மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன். மக்களின் வாழ்வாதாரம் முக்கியம்தான். ஆனால் அதைவிட வாழ்வு முக்கியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எனவே உயிரை காப்பாற்றுவதற்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மராட்டியம், டெல்லி, குஜராத்தில் ஏற்பட்ட நிலை தமிழ்நாட்டில் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் தான் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.

கொரோனா முதல் அலையின்போது தொடர்பு தடத்தை கண்டறிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகு வேகமாக அதிகரித்து வருவதால், அந்த தொடர்பு தடத்தை முழுமையாக கண்டறிவது எளிது அல்ல. எனினும் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வீட்டுக்கு வீடு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பை மக்கள் இப்போது நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். இதனால் லேசான அறிகுறி தென்பட்ட உடனேயே மக்கள் தாங்களாகவே மருத்துவமனைகளை நாடி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விழிப்புணர்வு வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story