பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது; சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சு
பொதுமக்கள் மத்தியில் கொரோனா குறித்த விழிப்புணர்வு அதிகரித்து உள்ளதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
மோட்டார்சைக்கிள் பேரணி
தென்சென்னை போக்குவரத்து போலீஸ் சார்பில், கொரோனா விழிப்புணர்வு நாடகம் மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணி பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு போலீஸ் கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி தலைமை தாங்கினார்.
ஹெல்மட் மற்றும் முக கவசம் குறித்த பதாகைகளுடன் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் விழிப்புணர்வு நாடகத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-
பொதுமக்களிடம் விழிப்புணர்வுதற்போது கொரோனா 2-வது அலை தீவிரமாக உள்ளது. இதை தடுக்க தேவையான முயற்சிகள் செய்து வருகிறோம். முக கவசம், சமூக இடைவெளி போன்ற விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனாவை தடுப்பது குறித்த விழிப்புணர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
கடந்த 15 தினங்களாக மார்க்கெட், கடைகளுக்கு வரும்போது பெரும்பாலானவர்கள் முககவசம் அணிந்து வருவதை காண முடிகிறது. எனவே பொதுமக்கள் மத்தியில் கொரோனா குறித்த விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது.
அனைவரும் முககவசம் அணிய வேண்டும். பாதுகாப்புடன் இருந்தால் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்காது. குறைந்தது 3 மாத காலம் இந்த பாதுகாப்பு நடைமுறைகளை நாம் தொடர்ந்து பின்பற்றியே தீரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெகுமதிபின்னர் சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து துணை கமிஷனர் தீபா சத்யன் எழுதி, இயக்கிய கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு நாடகத்தை பார்வையிட்ட அவர், அதில் கொரோனா வைரசாக நடித்த நடன இயக்குனர் டிசோசாவை பாராட்டி வெகுமதி வழங்கினார்.
அதன்பிறகு மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் கொரோனாவால் உயிரிந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் உருவப்படத்துக்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.