ஒரே நாள் இரவில் மர்மநபர்கள் துணிகரம்; 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு; மேலும் 8 கடைகளில் திருட முயற்சி
ஆவடி சுற்று வட்டார பகுதியில் ஒரே நாள் இரவில் 3 கடைகளின் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர்கள், மேலும் 8 கடைகளில் திருட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
3 கடைகளில் திருட்டு
ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருவேற்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில சென்று சாலையோரம் உள்ள 3 கடைகளின் பூட்டை உடைத்து திருடினர். மேலும் 8 கடைகளில் திருட முயற்சி செய்துள்ளனர்.
அதன்படி, ஆவடி கோவர்த்தினகிரியில் கலீல் என்பவரது மளிகை கடையில் இருந்த கல்லாப்பெட்டியை கையோடு தூக்கிச்சென்றனர். அதில் ரூ.28 ஆயிரம், 100 கிராம் வெள்ளி கட்டி, 2 செல்போன்கள், 2 ‘ஸ்வைப்பிங் மிஷின்’கள் இருந்தது.
ஆவடி பக்தவச்சலபுரம் பகுதியில் முத்தழகி என்பவரது பெட்டி கடையில் ரூ.7 ஆயிரத்தை திருடியதுடன், அங்கிருந்த சில்லரை காசுகளை கடையில் சிதற விட்டதுடன், சாக்லெட் பாக்கெட்டுகளையும் அள்ளிச்சென்றனர். அதன் அருகே உள்ள சிம்கார்டு விற்பனை செய்யும் கடையில் 2 மடிக்கணினி, 3 செல்போன்களையும திருடிச்சென்று விட்டனர்.
8 கடைகளில் திருட முயற்சிஅதன் எதிரே உள்ள செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடை, மளிகை கடை, ஆவடி, கன்னிகாபுரம் பகுதியில் பெருமாள் என்பவரது மளிகை கடை, புதிய ராணுவ சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட், திருவேற்காடு, காடுவெட்டி பகுதியில் அர்ஜூன் என்பவரது அடகு கடை, பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடை உள்பட மேலும் 8 கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து உள்ளனர்.
ஒரே நாள் இரவில், ஒரே நபர்கள் விடிய விடிய தொடர்ந்து அந்த பகுதிகளில் மொத்தம் 11 கடைகளில் கைவரிசையை காட்டி உள்ளனர். ஆவடியை சேர்ந்த விஜய் என்பவரது மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது. எனவே மர்மநபர்கள் விஜயின் மோட்டார் சைக்கிளை திருடி, அதில் சென்று இந்த திருட்டில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை ஆவடி போலீசார் தேடி வருகிறார்கள்.