கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ள சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம்; சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டாக்டர்கள், நர்சுகள் நியமனம்
சென்னையில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சியில் டாக்டர்கள், நர்சுகள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறபட்டு இருப்பதாவது:-
கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஓராண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விருப்பம் உள்ள தகுதி வாய்ந்த டாக்டர்கள், நர்சுகள் நேரடியாக கல்வித்தகுதி உள்ளிட்ட சான்றிதழ்களுடன் 29-ந்தேதி (இன்று) மற்றும் 30-ந்தேதி (நாளை) ஆகிய 2 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.
150 பணியிடங்கள்
இதில் டாக்டர்களுக்கான 150 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அதற்கு குறைந்தப்பட்ச கல்வித்தகுதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவக்கவுன்சிலில்
பதிவு செய்திருக்க வேண்டும். அதேபோல் நர்சுகளுக்கான 150 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் டிப்ளமோ நர்சிங் படித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். நேர்காணலுக்கு வருபவர்கள், உறுப்பினர் செயலர், மாநகர நல அலுவலர், சென்னை மாநகர நல சங்கம், பொது சுகாதாரத்துறை பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை, சென்னை-600 003 என்ற முகவரிக்கு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story