காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு


காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 29 April 2021 8:59 AM IST (Updated: 29 April 2021 8:59 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

மாவட்ட கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் கட்டிட வளாகத்தினை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது:-

3.6 சதவீதம் உயர்வு

மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,805 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 1 சதவீதத்தில் இருந்து தற்போது 3.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு, கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்படுவதால் இந்த சதவீதம் சற்று உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு ஒரு நாளைக்கு 1,500 மாதிரிகள் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது நாள் ஒன்றுக்கு 5,000 மாதிரிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே உயர்வுக்கு காரணம்.

இறப்பு விகிதம் குறைவு

நோய்த்தொற்று அறியப்பட்டு அவர்களின் தொற்றின் நிலைகளை வகைப்படுத்தி உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதால் இறப்பு விகிதம் பெருமளவுக்கு கட்டுப்பாட்டில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) ஜீவா, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், உதவி செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) சிவசண்முகராஜா மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.


Next Story