நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் மே 15-ந் தேதி வரை அமலில் இருக்கும்; மராட்டிய தலைமை செயலாளர் அறிவிப்பு


நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் மே 15-ந் தேதி வரை அமலில் இருக்கும்; மராட்டிய தலைமை செயலாளர் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 April 2021 11:38 PM GMT (Updated: 29 April 2021 11:38 PM GMT)

நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் மே 15-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று தலைமை செயலாளர் சீத்தாராம் குந்தே அறிவித்து உள்ளார்.

கடும் கட்டுப்பாடுகள்

மராட்டியத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 14-ந் தேதி இரவு 8 மணி முதல் மே 1-ந் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் நாளை(சனிக்கிழமை) காலை 7 மணியுடன் முடிகிறது. இந்தநிலையில் மராட்டியத்தில் நடைமுறையில் இருக்கும் கடும் கட்டுப்பாடுகளை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க நேற்று முன்தினம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தலைமை செயலாளர் அறிவிப்பு

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று மாநில அரசின் தலைமை செயலாளர் சீத்தாராம் குந்தே வெளியிட்டார். அதன்படி மே 15-ந் தேதி வரை கடும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பின் படி ஏற்கனவே அமலில் இருப்பது போல பொதுமக்கள் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது.

பொது போக்குவரத்துகளில் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வழிபாட்டு தலங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

பால், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 7 மணி முதல் 11 மணி வரை திறந்து இருக்கும். அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.


Next Story