கொரோனா நோயாளிகளுக்காக ஜிப்மரில் படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும்; பிரதமருக்கு புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் கடிதம்
பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் ஆகியோருக்கு புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலத்திற்கு 3 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க ஒப்புதல் அளித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8,500-ஐ கடந்துள்ளது. மேலும் தினமும் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள். ஆக்சிஜன், வெண்டிலேட்டர் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு தேவைப்படும் டோசிலிஸுமாப் மருந்து ஒதுக்கீட்டிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் விடுபட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி தலையிட்டு 200 டோசிலிஸுமாப் மருந்து, மீதமுள்ள 7 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து புதுச்சேரிக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான படுக்கை வசதிகளை புதுவை ஜிப்மரில் அதிகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.