கோயம்பேடு பஸ் நிலையத்தில் பிளஸ்-1 மாணவரிடம் ரூ.63 ஆயிரத்தை பறித்ததாக போலீஸ்காரர்கள் மீது புகார்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பிளஸ்-1 மாணவரிடம் ரூ.63 ஆயிரத்து 500 பணத்தை போலீஸ்காரர்கள் பறித்ததாக அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளனர்.
பிளஸ்-1 மாணவர்
சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான பிளஸ்-1 மாணவர், தனது பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார். வீட்டில் இருந்த ரூ.63,500 பணத்தையும் எடுத்துக்கொண்ட அவர், பஸ் மூலம் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் வந்திறங்கினார்.
நேற்று முன்தினம் இரவு அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த கோயம்பேடு போலீஸ்காரர்களான வேல்முருகன் மற்றும் அருண்கார்த்திக் ஆகியோர் பஸ் நிலையத்தில் நின்ற மாணவரிடம் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர்.
ரூ.63 ஆயிரத்தை பறித்தனர்அதில் அவரது பையில் ரூ.63,500 பணம் இருப்பதை கண்ட போலீஸ்காரர்கள் இருவரும் அதை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு எங்கு செல்வது? என்று தெரியாமல் பரிதவித்த மாணவர், தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். சென்னை வந்த அவர்கள், இதுபற்றி கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் 2 போலீஸ்காரர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
உண்மையிலேயே போலீசார்தான் மாணவரிடம் இருந்து பணத்தை பறித்தனரா? அல்லது மாணவரே பணத்தை தொலைத்துவிட்டு இதுபோல் நாடகமாடுகிறாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.