2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க இருக்கும் நிலையில் வாக்குச்சாவடி மையங்களில் மேஜைகள், இருக்கை வசதிகள்; சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை நடவடிக்கை


2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க இருக்கும் நிலையில் வாக்குச்சாவடி மையங்களில் மேஜைகள், இருக்கை வசதிகள்; சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 30 April 2021 11:11 AM IST (Updated: 30 April 2021 11:11 AM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு நடக்கும் மையங்களுக்கு தேவையான மேஜைகள் மற்றும் முகவர்கள் அமரும் இடவசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் செய்து முடித்து உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மையம்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ந்தேதி நடந்தது. வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேரமும் துணை ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டு உள்ளது.வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.குறிப்பாக தென்சென்னைக்கு உட்பட்ட தியாகராயநகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் மற்றும் வேளச்சேரி ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.அதேபோல் மத்திய சென்னைக்கு உட்பட்ட எழும்பூர், அண்ணாநகர், ஆயிரம்விளக்கு, பெரம்பூர், வில்லிவாக்கம், கொளத்தூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் லயோலா கல்லூரி மையத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

இரும்பு தடுப்பு வேலிகள்
அதேபோல் ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஆகிய 5 சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த மையங்களில் வாக்கு எண்ணிக்கைக்கு தேவைப்படும் வகையில் இரும்பு தடுப்பு வேலிகள் உள்பட பல்வேறு அடிப்படை பணிகள் நிறைவடைந்து உள்ளன.

இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

வாக்குகள் பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைத்து வாக்குகளை அறிந்து கொள்வதற்கான மேஜைகள், அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் அமருவதற்கான இருக்கைகள், இரும்பு கூண்டுகள், வலை தடுப்புகள், மின்னணு வாக்குப்பதிவு நடக்கும் மையத்தில் இரும்பு தடுப்பு வேலிகள் அனைத்து மாவட்டத்தில் உள்ள மையங்களிலும் அமைக்கப்பட்டு உள்ளது.இதற்கான பணிகளில் பொதுப்பணித்துறை கடந்த சில நாட்களாக ஈடுபட்டு இருந்தது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் 
ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story