ஜாமீன் நிராகரித்த பின்னரும் குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன்? செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு இன்று நேரில் ஆஜராக வேண்டும்; ஐகோர்ட்டு உத்தரவு


ஜாமீன் நிராகரித்த பின்னரும் குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன்? செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு இன்று நேரில் ஆஜராக வேண்டும்; ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 April 2021 6:20 AM GMT (Updated: 30 April 2021 6:20 AM GMT)

ஜாமீன் நிராகரித்த பின்னரும் குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன்? செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் நரசிம்மன். இவர், காட்டாங்கொளத்தூர் கோனாதி கிராமத்தில் 1964-ம் ஆண்டு 25 சென்ட் நிலம் வாங்கினார். இந்த நிலையில் அவரது நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, கட்டிடம் கட்டியுள்ளனர். இதுகுறித்து, கூடுவாஞ்சேரி போலீசில் 2017-ம் ஆண்டு நரசிம்மன் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வேளச்சேரியை சேர்ந்த வீரபத்திரன், முனுசாமி, கட்டிட காண்ட்ராக்டர் குமாரராஜ் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு முனுசாமி, குமாரராஜா ஆகியோர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் தனது நிலத்தில் உள்ள கட்டிடத்தை இடித்து அகற்றுமாறு உத்தரவிடக்கோரி நரசிம்மன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நீதிபதி என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு பெயரில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை படித்து பார்த்த நீதிபதிகள், ‘‘2018-ம் ஆண்டு முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யாதது ஏன்? என்பது குறித்து பதில் மனுவில் போலீஸ் சூப்பிரண்டு எதுவும் கூறவில்லை. எனவே, இதுகுறித்து செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story