சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி


சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 1 May 2021 1:15 AM IST (Updated: 1 May 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி இறந்தார்.

பாவூர்சத்திரம், மே:
பாவூர்சத்திரம் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

தொழிலாளி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர், பொடியனூரில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை ஒன்று உள்ளது. இங்கு பழைய கூரை ஓடுகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை பொருத்தும் வேலை தொடங்கியது.
இந்த வேலையில் ஆவுடையானுர், சிதம்பரநாடார் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி ரத்தினசாமி (வயது 42) மற்றும் ஆவுடையானுர் இந்திராநகரை சேர்ந்த சரவணன் (48) ஈடுபட்டிருந்தனர். அப்போது சுவர் திடீரென இவர்கள் மீது சரிந்து விழுந்தது.

பரிதாப சாவு

இதில் ரத்தினசாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இடிபாடுகளுக்கு இடையே சிக்கி சரவணன் பலத்த காயமடைந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் தென்காசி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இடிபாடுகளுக்கு இடையே சிக்கி கிடந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

மேலும் பலியான ரத்தினசாமி உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரத்தினசாமிக்கு லட்சுமி (40) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். லட்சுமி பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story