ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட குவியும் கூட்டம்- தடையில்லாமல் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். எனவே தடையில்லாமல் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
ஈரோடு
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். எனவே தடையில்லாமல் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
குவியும் மக்கள்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நேற்றும் கொரோனா தடுப்பூசி போட ஏராளமானவர்கள் குவிந்தனர். தினசரி 100 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று ஈரோடு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் டோக்கன்கள் வழங்கப்படுகிறது. ஆனால், அதையும் தாண்டி ஏராளமானவர்கள் வந்து ஏமாற்றத்துடன் செல்கிறார்கள்.
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி என்று அறிவிக்கப்பட்டு, தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு முன்பதிவும் தொடங்கி விட்டது. ஆனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் பதிவு செய்தவர்களுக்கு கூட தடுப்பூசிகள் போட முடியாத நிலை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் 2-வது டோஸ் ஊசி போடவேண்டியவர்களுக்கும் போதிய மருந்துகள் இருப்பில் இல்லை என்ற தகவலும் உள்ளது.
தடை இன்றி கிடைக்குமா?
இந்தநிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) முதல் ஊசி போடப்படும் என்று அறிவித்து இருந்தாலும் அது கேள்விக்குறிதான் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
நேற்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து காத்து இருந்தனர். அதில் சிலர் கூறும்போது, ‘கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்று அரசும், டாக்டர்களும் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் ஊசி போடுவதற்காக வந்தால் மருந்து இல்லை என்று திருப்பி அனுப்புகிறார்கள். வயதானவர்கள் தினசரி பல கிலோ மீட்டர்கள் கடந்து வந்து செல்ல முடியாது. மேலும், முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறும் அதிகாரிகள், ஊசி போடுவதற்கு உரிய வசதியை ஏற்படுத்தி தராமல் இருப்பது வருத்தமானது’ என்றனர். எனவே கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் தடை இன்றி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது.
Related Tags :
Next Story