திருச்செந்தூர் அருகே மீனவர்கள் மோதல்; 7 பேர் காயம் 18 பேர் மீது வழக்குப்பதிவு


திருச்செந்தூர் அருகே   மீனவர்கள் மோதல்; 7 பேர் காயம்   18 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 1 May 2021 2:05 PM GMT (Updated: 1 May 2021 2:05 PM GMT)

திருச்செந்தூர் அருகே மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 7 பேர் காயம் அடைந்தனர். 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 7 பேர் காயம் அடைந்தனர். 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மீனவர்கள் மோதல்

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை தெற்கு தெருவை சேர்ந்த மீனவர்களுக்கும், வடக்கு தெருவை சேர்ந்த மீனவர்களுக்கும் மோதல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தெற்கு தெருவை சேர்ந்த மீனவரான ஜெர்சன் (வயது 25) என்பவர் கடந்த 29-ந் தேதி வடக்கு தெருவில் உள்ள கடை பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அப்பகுதி மீனவர்கள் ஜெர்சனை, அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். 

7 பேர் காயம்

இதற்கிடையே வடக்கு தெருவை சேர்ந்த ரொசான் (39), அவரது நண்பர் மேசாக் ஆகியோர் வலை பின்னும் கூடத்தில் பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தெற்கு தெருவை சேர்ந்த மீனவர்கள் சிலர் அவர்களை அவதூறாக பேசி கட்டையால் தாக்கியதாகவும், இதை தடுக்க வந்த டென்சிங், யூனஸ், ஆண்ட்ரூஸ் ஆகியோரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 5 பேரும் படுகாயம் அடைந்தனர். 

மேலும் தெற்கு தெருவை சேர்ந்த நிஜாந்தன், அவரது நண்பர் ஜாக்சன் ஆகியோர் வடக்கு தெருவில் சமாதானம் பேச சென்றனர். அப்போது அவர்களும் தாக்கப்பட்டனர். 
இந்த சம்பவங்களில் இருதரப்பைச் சேர்ந்த ரொசான், மேசாக், டென்சிங், யூனஸ், ஆண்ட்ரூஸ், நிஜாந்தன், ஜாக்சன் ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் இருதரப்பைச் சேர்ந்த 18 பேர் மீது திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இதற்கிடையே மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்த மீனவர்களை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து ஆலந்தலையில் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பாரத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story