8 சட்டமன்ற தொகுதிகளில் 197 சுற்றுகள் மூலமாக வாக்கு எண்ணிக்கை- கலெக்டர் தகவல்


8 சட்டமன்ற தொகுதிகளில் 197 சுற்றுகள் மூலமாக வாக்கு எண்ணிக்கை- கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 May 2021 9:40 PM GMT (Updated: 1 May 2021 9:40 PM GMT)

8 சட்டமன்ற தொகுதிகளில் 197 சுற்றுகள் மூலமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

ஈரோடு
8 சட்டமன்ற தொகுதிகளில் 197 சுற்றுகள் மூலமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
கலெக்டர் ஆய்வு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, கோபி கலை அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அங்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது வாக்கு எண்ணிக்கை மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டு உள்ளதா? வாகன நிறுத்துமிடம், வாக்குச்சாவடி முகவர்கள் அறை, ஊடக மையம், மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் ஆகியன குறித்தும் ஆய்வு நடத்தினார். அதன்பிறகு அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஓட்டு எண்ணுவதற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 14 மேஜைகளும், தபால் ஓட்டு எண்ணிக்கைக்கு தலா 4 மேஜைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
197 சுற்றுகள்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 23 சுற்றுகளும், ஈரோடு மேற்கு தொகுதிக்கு 29 சுற்றுகளும், மொடக்குறிச்சி தொகுதிக்கு 24 சுற்றுகளும், பெருந்துறை தொகுதிக்கு 23 சுற்றுகளும், பவானி தொகுதிக்கு 24 சுற்றுகளும், அந்தியூர் தொகுதிக்கு 22 சுற்றுகளும், கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு 25 சுற்றுகளும், பவானிசாகர் தொகுதிக்கு 27 சுற்றுகளும் என மொத்தம் 197 சுற்றுகள் நடைபெறுகிறது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிவரன் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கோபி தேர்தல் நடத்தும் அதிகாரி பழனிதேவி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story