காதல் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் தீக்குளித்து புதுப்பெண் தற்கொலை


காதல் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் தீக்குளித்து புதுப்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 1 May 2021 9:40 PM GMT (Updated: 1 May 2021 9:40 PM GMT)

காதல் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு
காதல் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் திருமணம்
ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டு  ரோடு சாஸ்திரி  சாலை பகுதியை சேர்ந்தவர் முகமதுவாசிம். இவருடைய மனைவி சர்மிளாபானு. இவர்களுடைய மூத்த மகள் சஸ்மியாபானு. அதே பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் என்பவரை சஸ்மியாபானு காதலித்து வந்தார். அவர்களுடைய காதலுக்கு சஸ்மியாபானுவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து சதீஸ்குமாரும், சஸ்மியாபானுவும் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சேலம்  அன்னதானப்பட்டியில் வசித்து வந்தனர்.
கணவர் சாவு
கடந்த 28-ந் தேதி சதீஸ்குமார் வேலைக்காக திருச்செங்கோட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே சதீஸ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து சஸ்மியாபானு தனது காதல் கணவரை இழந்த துயரத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டார். ஈரோட்டில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்த அவர் கணவரே இறந்துவிட்ட பிறகு நான் உயிரோடு இருந்து என்ன செய்யப்போகிறேன் என்று குடும்பத்தினரிடம் மனவேதனையுடன் சொல்லி வந்துள்ளார்.
தீக்குளித்து தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் பகலில் அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்ற சஸ்மியாபானு கதவை உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். பிறகு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகி உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை சஸ்மியா பானு இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சஸ்மியா பானுவுக்கு திருமணமாகி 2½ மாதங்களே ஆகி இருப்பதால் ஈரோடு ஆர்.டி.ஓ.வும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story