4 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை


4 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை
x
தினத்தந்தி 2 May 2021 6:30 PM IST (Updated: 2 May 2021 6:30 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி விறுவிறுப்பாக நடந்தது.

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி விறுவிறுப்பாக நடந்தது.
பாதுகாப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. ராமநாதபுரம் அருகே உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. 
இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரம், பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் 5 லட்சத்து 85 ஆயிரத்து 189 பெண்கள், 5 லட்சத்து 79 ஆயிரத்து 908 ஆண் மற்றும் 63 மூன்றாம் பாலினத்தவர் என 11 லட்சத்து 65 ஆயிரத்து 160 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் பரமக்குடி (தனி) தொகுதியில் 15 பேர், திருவாடானை தொகுதியில் 15 பேர், ராமநாதபுரம் தொகுதியில் 19 பேர், முதுகுளத்தூர் தொகுதியில் 23 பேர் என மொத்தம் 72 வேட்பாளர்கள் களத்தில் நின்று போட்டியிட்டனர். 
வாக்காளர்கள்
கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 84 ஆயிரத்து 933 ஆண்கள், 95 ஆயிரத்து 333 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 269 பேர் வாக்களித்தனர். திருவாடானை தொகுதியில் 92 ஆயிரத்து 10 ஆண்கள், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 14 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 2 லட்சத்து 25 பேர் வாக்களித்தனர்.
ராமநாதபுரம் தொகுதியில் 96 ஆயிரத்து 556 ஆண்கள், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 569 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 2 லட்சத்து 8 ஆயிரத்து 126 பேர் வாக்களித்தனர். முதுகுளத்தூர் தொகுதியில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 198 ஆண்கள், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 83 பெண்கள் என 2 லட்சத்து 18 ஆயிரத்து 281 பேர் வாக்களித்தனர். 
கண்காணிப்பு
இதன்படி 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 லட்சத்து 76 ஆயிரத்து 697 ஆண்கள், 4 லட்சத்து 29 ஆயிரத்து 999 பெண்கள் மற்றும். மூன்றாம் பாலினத்தவர் 5 என மொத்தம் 8 லட்சத்து 6 ஆயிரத்து 701 பேர் இந்த தேர்தலில் வாக்களித்தனர். பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ராமநாதபுரம் அருகே உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு 24 மணி நேர தீவிர பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
 25 நாட்களுக்கு பின்னர் இந்த 4 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 14 மேஜைகள் அமைத்தும், தபால் வாக்குகளுக்கு தலா 8 மேஜைகள் அமைத்தும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஒவ்வொரு மேஜையிலும் ஒரு நுண்பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர் பணியில் ஈடுபட்டனர்.
முதலில் தனி அறையில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. தபால் வாக்கு எண்ணிக்கையில் 4 தொகுதி களிலும் வேட்பாளர்கள் மாறிமாறி முன்னிலையில், பின்னடைவில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கை பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
அனுமதி
வாக்கு எண்ணும் மையத்தில் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைவருக்கும் முககவசம், சானிடைசர் வழங்கப்பட்டு கொரோனா வழிகாட்டு முறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. வாக்கு எண்ணும் பகுதியில் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி கொண்டு தூய்மைபடுத்தப்பட்டன.

Next Story