கொரோனா பரவலை கட்டுப்படுத்த திருவாரூரில் மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்டன அசைவ பிரியர்கள் ஏமாற்றம்


கொரோனா பரவலை கட்டுப்படுத்த திருவாரூரில் மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்டன அசைவ பிரியர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 2 May 2021 11:37 PM IST (Updated: 2 May 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை கட்டுப்படுத்த திருவாரூரில் மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

திருவாரூர், 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா. பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொதுமக்கள் நடமாடவும், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இறைச்சி கடைகள்

இதுதவிர ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அதற்கு முதல் நாள் சனிக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிக அளவில் குவிந்தது. இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் சனிக்கிழமைகளிலும் இறைச்சி கடைகள் திறக்க அரசு தடை விதித்து உத்தரவிட்டது.

கடைகள் மூடப்பட்டன

அதன்படி நேற்று இறைச்சிக் கடைகள் மூடப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று திருவாரூர் பழைய பஸ் நிலையம், அண்ணாசதுக்கம், புதுத்தெரு, கொடிக்கால்பாளையம் ஆகிய பகுதிகளில் இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதைப்போல மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், நன்னிலம் பகுதியிலும் மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருந்தன. மேலும் மாவட்டம் முழுவதும் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

Next Story