மாவட்ட செய்திகள்

தி.மு.க. வேட்பாளர் கா.ராமச்சந்திரன் வெற்றி + "||" + DMK Candidate K Ramachandran wins

தி.மு.க. வேட்பாளர் கா.ராமச்சந்திரன் வெற்றி

தி.மு.க. வேட்பாளர் கா.ராமச்சந்திரன் வெற்றி
குன்னூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கா.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.
ஊட்டி

குன்னூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கா.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கை

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கா.ராமச்சந்திரன், அ.தி.மு.க. சார்பில் கப்பச்சி டி.வினோத், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கலைச்செல்வன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜாகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் லாவண்யா உள்பட 10 பேர் போட்டியிட்டனர். 

இந்த தொகுதியில் 91 ஆயிரத்து 567 ஆண்கள், 1 லட்சத்து 344 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 913 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 932 வாக்குகள் பதிவானது. 65 ஆயிரத்து 863 ஆண்கள், 68 ஆயிரத்து 68 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வாக்களித்தனர். இது 69.86 சதவீதம் ஆகும்.

தி.மு.க. வெற்றி

வாக்குப்பதிவுக்கு பிறகு எந்திரங்கள் பாதுகாப்பாக ஊட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டன. அங்கு நேற்று காலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 280 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாக எண்ணப்பட்டது. 

முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 1994 தபால் வாக்குகளில் கா.ராமச்சந்திரன் 1,349 வாக்குகள், கப்பச்சி டி.வினோத் 461 வாக்குகள் பெற்றனர். தொடர்ந்து எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.

முதலில் நடந்த சுற்றுகளில் அ.தி.மு.க. வேட்பாளர் கப்பச்சி டி.வினோத் முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர் தி.மு.க. வேட்பாளர் கா.ராமச்சந்திரன் தொடர்ந்து முன்னிலை வகித்தார். 

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க. வேட்பாளர் கா.ராமச்சந்திரன் 61,820 வாக்குகள், அதி.மு.க. வேட்பாளர் கப்பச்சி டி.வினோத் 57,715 வாக்குகள் பெற்றனர். இதன் மூலம் அ.தி.மு.க. வேட்பாளரை விட தி.மு.க. வேட்பாளர் 4,105 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். 

முன்னாள் அமைச்சர்

கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் கூடலூர் தொகுதியில் கா.ராமச்சந்திரன் வெற்றி பெற்று கதர் வாரியத்துறை அமைச்சராக இருந்தார். 2011-ம் ஆண்டு தேர்தலில் குன்னூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆனார். தற்போது 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவரிடம், குன்னூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ரஞ்சித்சிங் வழங்கினார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 7,252 வாக்குகள் பெற்றார். 1,207 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி உள்ளது. மற்ற வேட்பாளர்கள் 7 பேர் சொற்ப வாக்குகளே பெற்றனர்.