கொரோனா பாதித்த 70 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை


கொரோனா பாதித்த 70 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை
x
தினத்தந்தி 7 May 2021 2:16 PM GMT (Updated: 7 May 2021 2:41 PM GMT)

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த 70 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது. தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் 110 படுக்கைகள், ஐ.சி.யூ. வார்டில் 25 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளது. 

குன்னூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 24 படுக்கைகள் உள்ளன. நீலகிரியில் கடந்த 3 நாட்களாக தினமும் 100 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

தற்போது உடல் நிலை அதிக பாதிப்புக்கு உள்ளானவர்கள் பரிசோதனைக்காக வருகின்றனர். அறிகுறி தென்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி கூறியதாவது:-

ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 70 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ. வார்டில் 20 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் படுக்கைகள் நிரம்பி வருகிறது.

உடல் மோசமான நிலைக்கு சென்ற பின்னர் மருத்துவமனைக்கு வருவதால் நுரையீரல் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. 5 நாள் சிகிச்சை அளித்த பின்னர் சி.டி. ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. அதிக பாதிப்பு இருந்தால் கூடுதல் நாட்கள் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. 

சித்தா மருத்துவ பிரிவு சார்பில் தினமும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. உடல்நிலை முன்னேற்றம் அடைந்த பின்னர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நோயாளிகளுக்கு மூச்சு பயிற்சி, யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story