சின்னசேலம், கச்சிராயப்பாளையம் பகுதியில் ஆய்வு கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் கிரண்குராலா எச்சரிக்கை


சின்னசேலம், கச்சிராயப்பாளையம் பகுதியில் ஆய்வு கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் கிரண்குராலா எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 May 2021 4:40 PM GMT (Updated: 7 May 2021 4:40 PM GMT)

சின்னசேலம், கச்சிராயப்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கிரண்குராலா கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி, 

கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் அதிவேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தினந்தோறும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மளிகை, காய்கறி, பெட்டிக்கடைகள், டீக்கடைகளை திறக்கலாம் என தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. அதன்அடிப்படையில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் குறிப்பிட்ட நேரங்களில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், கடை ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றிடவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயப்பாளையம் பகுதியில் சிலர் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்வதாக புகார் எழுந்தது.

கலெக்டர் ஆய்வு

அதன்அடிப்படையில் மாவட்ட கலெக்டர் கிரண்குராலா நேற்று கச்சிராயப்பாளையம் கடைவீதிகள், பஸ் நிலையம் போன்ற பல்வேறு பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா? என அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது அவர், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றிடவேண்டும் எனவும் எச்சரித்தார். 

எச்சரிக்கை

அதன்பிறகு 12 மணிக்கு மேல் திறந்திருந்த ஒரு சில கடைகளை உடனடியாக மூடுமாறு அதன் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டதோடு, கட்டுப்பாடுகளை மீறி வியாபாரம் செய்தால், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அந்த கடையை பூட்டி சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்தார். மேலும் அனைத்து வணிகர்களும் அரசு பிறப்பித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி, கொரோனா பாதிப்பை குறைக்கவேண்டும் என்றும் கலெக்டர் கிரண்குராலா வியாபாரிகளை அறிவுறுத்தினார். ஆய்வின்போது சின்னசேலம் தாசில்தார் விஜயபிரபாகரன்,  பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். 

சின்னசேலத்தில் 3 கடைகளுக்கு சீல்

இதையடுத்து கலெக்டர் கிரண்குராலா சின்னசேலம் பேரூராட்சியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மூங்கில்பாடி சாலையில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மதியம் 12 மணிக்குமேல் திறந்து வைக்கப்பட்டிருந்த மளிகைக்கடை, எலெக்ட்ரிக்கல் கடை, வளையல் கடை ஆகிய 3 கடைகளை பூட்டி சீல் வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அந்த 3 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். .

Next Story