கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி


கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
x
தினத்தந்தி 7 May 2021 5:22 PM GMT (Updated: 7 May 2021 5:26 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியானார்கள். புதிய உச்சமாக நேற்று 462 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 32 ஆயிரத்து 200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 462 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இந்த பாதிப்பு கொரோனா 2-வது அலையில் புதிய உச்சமாக உள்ளது.

இவர்களில் பெங்களூரு, ஆந்திரா, உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய இடங்களில் இருந்து கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, நெய்வேலி வந்த 15 பேர், சென்னை, தஞ்சை, திண்டுக்கல், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து கடலூர், காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், நெய்வேலி, புவனகிரி, பரங்கிப்பேட்டை, குமராட்சி ஆகிய இடங்களுக்கு வந்த 33 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

இது தவிர அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள பரங்கிப்பேட்டை, புவனகிரியை சேர்ந்த 2 பேர், சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 81 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 331 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியானது.

நேற்று முன்தினம் வரை 29 ஆயிரத்து 764 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 343 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று முன்தினம் வரை 343 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் 5 பேர் பலியானார்கள்.

இதன் விவரம் வருமாறு:-

சிதம்பரத்தை சேர்ந்த 53 வயது ஆண், கீரப்பாளையத்தை சேர்ந்த 65 வயது முதியவர் ஆகிய 2 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 65 வயது முதியவர், பண்ருட்டியை சேர்ந்த 48 வயது ஆண், நெய்வேலி என்.எல்.சி.யை சேர்ந்த 39 வயது ஆண் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையிலும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவர்கள் 5 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொரோனா பாதித்த 1713 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனை, தனியார் கல்லூரி, விடுதிகளிலும், 494 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 91கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்த நிலையில், நேற்று 100 ஆக உயர்ந்தது.

Next Story