முழு ஊரடங்கு எதிரொலி: விழுப்புரம் நகருக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்த மக்கள்


முழு ஊரடங்கு எதிரொலி: விழுப்புரம் நகருக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 8 May 2021 5:16 PM GMT (Updated: 2021-05-08T22:46:09+05:30)

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக நேற்று விழுப்புரம் நகர மார்க்கெட்டுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

விழுப்புரம், 

முழு ஊரடங்கு

தமிழகத்தில் தற்போது அதிதீவிரமாக பரவி வரும் கொரோனா 2-வது அலையை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் நாளை (திங்கட்கிழமை) முதல் 24-ந் தேதி வரை 2 வார காலத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று அரசு அறிவித்ததோடு அந்நாட்களில் பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. 
மேலும் ஊரடங்கு நாட்களில் காய்கறிகள், மளிகை பொருட்கள், பால், மருந்துகள் உள்ளிட்டவை தடையின்றி கிடைக்கும், எனவே அவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள் கடைவீதிகளுக்கு கூட்டம், கூட்டமாக சென்று முண்டியடித்துக்கொள்ள வேண்டாம் என்று அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால் முழு ஊரடங்கு நாட்களில் அரசின் தீவிர கட்டுப்பாடுகள், போலீசாரின் கெடுபிடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்படக்கூடும் எனக்கருதி அவற்றை மொத்தமாக வாங்கி வீடுகளில் இருப்பு வைத்துக்கொள்வதற்காக பொதுமக்கள் நேற்று கடைவீதிகளுக்கு கூட்டம், கூட்டமாக சென்றனர்.

ஏராளமானோர் குவிந்தனர்

வீட்டுக்கு தேவையான உணவுப்பொருட்கள், காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்குவதற்காக நேற்று காலையில் இருந்தே விழுப்புரம் நகர கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வாங்குவதற்காக விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கூட்டம், கூட்டமாக சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர்.இவ்வாறு ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள், மார்க்கெட்டுகளில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

கொரோனா பரவல் வேகமெடுத்து வரும் சூழலில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்காமல், அவற்றை காற்றில் பறக்க விட்டுவிட்டு சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கொரோனா என்ற கொடிய நோயின் தாக்கத்தை மறந்தும் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு பொருட்களை வாங்கிச்சென்றதை காண முடிந்தது.
இவ்வாறு விழுப்புரம் நகர கடைவீதிகள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் காலையில் இருந்து இரவு 9 மணி வரை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சீரான வேகத்தில் சென்றன.

இறைச்சி கடைகளில்...

இதேபோல் 2 நாட்கள் இறைச்சி, மீன் கடைகளும் வழக்கம்போல் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அசைவ பிரியர்கள் பலரும் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்டுகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்தமான அசைவ வகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Next Story