விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் சாவு 319 பேருக்கு நோய் தொற்று


விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் சாவு 319 பேருக்கு நோய் தொற்று
x
தினத்தந்தி 8 May 2021 5:21 PM GMT (Updated: 8 May 2021 5:21 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் இறந்தனர். மேலும் 319 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம், 

ஒரே நாளில் 5 பேர் சாவு

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 21,712 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 136 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 18,822 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 2,754 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் கே.கே.சாலையை சேர்ந்த 68 வயதுடைய மூதாட்டி, விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையை சேர்ந்த 73 வயது மூதாட்டி, விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய நபர், பா.வில்லியனூரை சேர்ந்த 63 வயதுடைய முதியவர், திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டையை சேர்ந்த 85 வயதுடைய முதியவர் ஆகிய 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 136-ல் இருந்து 141 ஆக உயர்ந்துள்ளது. இறந்த இவர்கள் 5 பேருடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

319 பேருக்கு நோய் தொற்று

மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் ஒரே நாளில் 319 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,031 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 423 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 19,245 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது 2,647 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் பீதி

மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறும், அத்தியாவசிய தேவைக்காக தவிர தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணியும்படியும், சமூக விலகலை பின்பற்றும்படியும், அவ்வப்போது கிருமி நாசினியால் கைகளை நன்கு சுத்தமாக கழுவும்படியும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story