முழு ஊரடங்கு: 288 மின்சார ரெயில் சேவை இயக்கம் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு


முழு ஊரடங்கு: 288 மின்சார ரெயில் சேவை இயக்கம் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 May 2021 10:17 AM IST (Updated: 10 May 2021 10:17 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு: 288 மின்சார ரெயில் சேவை இயக்கம் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு.

சென்னை, 

சென்னையில் ஏற்கனவே 480 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. இதில் அத்தியாவசிய பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று (10-ந்தேதி) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையும். இதனால் 200 மின்சார ரெயில் சேவைகள் வரை குறைக்கப்படும் என ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று முதல் சென்னையில் 288 மின்சார ரெயில் சேவைகள் வார நாட்களில் இயக்கப்படுவதாக சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை சென்னையில் 288 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே 98 மின்சார ரெயில் சேவையும், சென்னை சென்டிரல்-கும்மிடிப்பூண்டி இடையே 50 மின்சார ரெயில் சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே 40 மின்சார ரெயில் சேவையும், கடற்கரை-செங்கல்பட்டு-திருமால்பூர் இடையே 88 மின்சார ரெயில் சேவையும், ஆவடி-பட்டாபிராம் இடையே 12 மின்சார ரெயில் சேவையும் என 288 சேவைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வார நாட்களில் இயக்கப்படுகிறது.

இந்த மின்சார ரெயிலில் ஏற்கனவே அறிவித்தபடி அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் மட்டும் உரிய ஆவணங்களுடன் பயணிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story