ஆந்திரா மாநிலத்திலிருந்து வருபவர்களை கட்டுப்படுத்த பள்ளிப்பட்டு தாலுகாவில் 6 இடங்களில் சோதனைச் சாவடிகள் ஏற்பாடு
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா நான்கு திசைகளிலும் ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ளது.
இதனால் ஆந்திர மாநிலத்திலிருந்து அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தமிழகத்திற்கு வந்து செல்கின்றனர்.
தற்போது தமிழகத்தில் இரண்டாவது அலை கொரோனா தொற்று தீவிரமாக உள்ளது. இதனால் இந்த தொற்றை கட்டுப்படுத்த பள்ளிப்பட்டு பேரூராட்சி மற்றும் பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகள் சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இருந்து தினசரி இருசக்கர வாகனங்களில் தமிழகத்திற்குள் வந்து செல்லும் ஆந்திர மக்களை கட்டுப்படுத்த தமிழக, ஆந்திர மாநில எல்லைகளில் பள்ளிப்பட்டு தாலுகாவில் ஆறு சோதனைச்சாவடிகள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின்பேரில், நேற்று அமைக்கப்பட்டன.
அதேபோல் பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் திருத்தணி சாலை, பள்ளிப்பட்டு சாலை, அத்திமாஞ்சேரி பேட்டை சாலை ஆகிய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.