கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த தந்தை-மகனுக்கு வலைவீச்சு இடைத்தரகர் கைது


கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த தந்தை-மகனுக்கு வலைவீச்சு இடைத்தரகர் கைது
x
தினத்தந்தி 12 May 2021 10:09 AM IST (Updated: 12 May 2021 10:09 AM IST)
t-max-icont-min-icon

கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த தந்தை-மகனுக்கு வலைவீச்சு இடைத்தரகர் கைது.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த அம்பத்தூர் ஞானமூர்த்தி நகர் அம்பாள் தெருவை சேர்ந்தவர் தர்மராஜன் (வயது 35). இவர் விளம்பரத்தை பார்த்து சென்னையை அடுத்த நங்கநல்லூரில் இயங்கி வந்த நிறுவனம் ஒன்றில் தனது காரை வாடகைக்கு விட்டார். இந்த நிலையில், சில மாதங்கள் மட்டுமே காருக்கான வாடகை தொகையை தந்த நிறுவனத்தினர், அதன் பிறகு வாடகை பணத்தை கார் உரிமையாளருக்கு தரவில்லை என்று தெரிகிறது. மேலும் காரையும் நிறுவனத்தினர் உரிமையாளர்களுக்கு திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து காரை மீட்டு தரும்படி பழவந்தாங்கல் போலீசில் தர்மராஜன் புகார் அளித்தார். இது குறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த இர்பான் மற்றும் அவரது மகன் முகமது பாசில் ஆகியோர் கார் உரிமையாளரிடம் வாடகைக்கு எடுத்த கார்களை அங்கு டிராவல்ஸ் நடத்தி வரும் சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த சபரீசன் (43) என்பவர் மூலம் அடமானம் வைத்தும் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இடைத்தரகர் சபரீசனை போலீசார் பிடித்து, அவரிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 8 கார்களை மீட்டனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், இது போன்று 16 கார் உரிமையாளர்களிடம் போலி விளம்பரம் மூலம் கார்களை வாடகைக்கு எடுப்பது போல் நடித்து விற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சபரீசனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள தந்தை, மகன் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

Next Story