பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 300 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் ஆஸ்பத்திரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது


பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 300 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் ஆஸ்பத்திரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 12 May 2021 4:44 AM GMT (Updated: 12 May 2021 4:44 AM GMT)

பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 300 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாநகராட்சி கமிஷனரிடம், முதல்-அமைச்சர் வழங்கினார். இதையடுத்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அந்த கருவிகள் பிரித்து அனுப்பப்பட்டது.

சென்னை, 

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சைகள் தேவைப்படுவதால் ஆக்ஸிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் (ஆக்சிஜன் கன்சண்ட்ரேட்டர்ஸ்) மாநகராட்சியின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

கடந்த 10-ந்தேதி, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சரிடம், தனியார் பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், 300 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்கள்.

ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்பட்டது

இதையடுத்து 300 ஆக்சிஜன் செறிவூட்டிகளை முதன்மை செயலாளரும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப் சிங் பேடியிடம் முதல்-அமைச்சர் வழங்கினார். இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகளை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு உடனடியாக பிரித்து வழங்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சென்னை ஸ்டான்லி அரசு பொது ஆஸ்பத்திரியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரிக்கு 33 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், கிண்டி கிங்ஸ் ஆஸ்பத்திரிக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், தண்டையார்பேட்டை தொற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு 80 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும், சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு 40 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், கோடம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு 40 ஆகசிஜன் செறிவூட்டிகளும் என மொத்தம் 293 ஆக்சிஜன் செறிவூட்டிகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.

ஆய்வு

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சென்னை ஸ்டான்லி அரசு பொது ஆஸ்பத்திரி மற்றும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு நேரடியாக சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு, மாநகராட்சியால் வழங்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகளின் செயல்பாட்டினை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, ஸ்டான்லி அரசு பொது ஆஸ்பத்திரி வடக்கு வட்டார துணை கமிஷனர் பி.ஆகாஷ், ஸ்டான்லி அரசு ஆஸ்பத் திரி டீன் டாக்டர் பு.பாலாஜி உட்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story