வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள்: கொரோனா நோயாளிகளை அனுமதிக்க முடியாமல் திணறும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி
கொரோனா நோயாளிகளை அனுமதிக்க முடியாமல் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி திணறி வருகிறது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் நோயாளிகளுடன் சாலையில் வரிசைகட்டி நிற்கின்றன. 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க நேர்வதால் நோயாளிகளின் உறவினர்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
சென்னை,
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டைவிட இத்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் தினசரி 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகின்றனர். தற்போதைய கொரோனாவின் 2-வது அலையில் பெரும்பாலானோர் மூச்சுத்திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர்.
வயது வித்தியாசமின்றி மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மூச்சுத்திணறல் ஏற்பட்ட பின்புதான் பெரும்பாலானோர் ஆஸ்பத்திரியை நாடுகின்றனர். இந்தநிலையில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறலால் ஆஸ்பத்திரிக்கு வருவதால், படுக்கைகளை ஒதுக்குவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
ஆக்சிஜன் சப்ளை
அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகளுக் குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. இதனால், நோயாளிகளை வீட்டில் இருந்து சிகிச்சை மேற்கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே பலருக்கு மூச்சுத்திணறல் அதிகமாவதால், ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே ஆக்சிஜன் சப்ளை கொடுக்கப்படுகிறது.
ஆக்சிஜன் சப்ளை இல்லாத ஆம்புலன்ஸ்களில் வரும் நோயாளிகள் வழியிலேயே உயிரிழக்கும் சோகமும் நிகழ்கிறது. உயிரிழப்புகளைத் தடுக்கும்வகையில் தமிழக அரசு ஆக்சிஜன் வசதியுடன்கூடிய படுக்கைகளை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. தற்போதைய சூழலில் எல்லா அரசு ஆஸ்பத்திரிகளின் வாயில்களிலும் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளுடன் வரிசைகட்டி நிற்கின்றன.
5 மணி நேரத்துக்கு மேலாக...
இந்தநிலையில் நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளுடன் நீண்டவரிசையில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தன. இங்கு உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பியதாலும், புதிதாக வந்த நோயாளிகள் அனைவருக்கும் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளை கொடுக்கமுடியாத காரணத்தினாலும் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே நோயாளிகள் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆம்புலன்ஸ் வாகனத்தில் 16 லிட்டர் வரையிலான கொள்ளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக 5 முதல் 6 மணி நேரம் வரையில் மட்டுமே அந்த சிலிண்டர்கள் உதவியுடன் நோயாளிகள் சுவாசிக்க முடியும் எனவும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தெரிவித்தனர். இதனால் நேற்று ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் பல மணி நேரமாக படுக்கைக்காக காத்திருந்த நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள்.
நோயாளிகள் சிரமம்
கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினாலோ அல்லது உயிரிழக்க நேர்ந்தாலோ மட்டுமே, ஆம்புலன்சில் காத்துக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு படுக்கைகள் வழங்கப்படுகின்றன. இதனால் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆஸ்பத்திரியான சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலேயே இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றால், மற்ற ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளின் நிலை எப்படி இருக்குமோ என அங்கிருந்தவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே அதிகரித்துவரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் உடனடியாக படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story