கொரோனா 2-வது அலையால் வெறிச்சோடியது: சென்னை விமான நிலையத்தில் 78 விமான சேவைகள் மட்டுமே இயங்கின


கொரோனா 2-வது அலையால் வெறிச்சோடியது: சென்னை விமான நிலையத்தில் 78 விமான சேவைகள் மட்டுமே இயங்கின
x
தினத்தந்தி 12 May 2021 5:47 AM GMT (Updated: 12 May 2021 5:47 AM GMT)

கொரோனா 2-வது அலை பரவலால் சென்னை உள்விமான நிலையத்தில் 78 விமான சேவைகள் மட்டுமே இயங்கியது. பயணிகள் வரத்து குறைவால் வெறிச்சோடியது.

ஆலந்தூர், 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்நாட்டு விமான பயணிகள் அவசர வேலைகளுக்காக விமானங்களில் பயணிக்கலாம் என்று விலக்கு அளித்து உள்ளது.

ஆனாலும் பயணிகள் பலா் கொரோனா காலத்தில் விமானங்களில் பயணிக்க விரும்பவில்லை. கூட்டிற்குள் அடைப்பட்டது போல் சில மணி நேரம் விமானத்திற்குள் இருக்கும் போது யாராவது ஒரு பயணிக்கு தொற்று இருக்குமேயானால் அது பலருக்கு பரவ வாய்ப்பு உள்ளது என்று பயணிகள் நினைக்கின்றனா்.

இதனால் தான் விமான பயணிகள் வரத்து படிப்படியாக குறைந்து விமானங்களும் பெருமளவு ரத்து செய்யப்படுகின்றன.

78 விமான சேவைகள்

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று உள்நாட்டு விமான சேவைகள் இதுவரை இல்லாத அளவு பெருமளவு குறைந்தது. சென்னையில் இருந்து நாட்டின் பிற நகரங்களுக்கு 38 புறப்பாடு உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

அதில் 2 ஆயிரத்து 400 பயணிகள் மட்டுமே பயணித்தனர். அதுபோல் சென்னைக்கு பிற நகரங்களில் இருந்து 40 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் ஆயிரத்து 300 போ் பயணித்தனர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 78 விமான சேவைகள் மட்டுமே இயங்கின. இதனால் உள்நாட்டு விமான நிலையம் வெறிச்சோடியது.

கொரோனா முதல் அலை ஊரடங்கின் போது, சில தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு மே 25-ந் தேதியில் இருந்து மீண்டும் சென்னையில் உள்நாட்டு விமான சேவை தொடங்கி நடந்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 250-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயங்கி வந்த நிலையில், தற்போது விமான சேவைகள் குறைந்து சொற்ப பயணிகளுடன் சென்னை உள்நாட்டு விமான நிலையம் செயல்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

Next Story