திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு கவச உடை அணிந்து கொரோனா வார்டை பார்வையிட்டார்
திருவள்ளூரில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கவச உடை அணிந்து கொரோனா வார்டை பார்வையிட்டார்.
திருவள்ளூர்,
தமிழகத்தில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா வைரசின் 2-வது அலையால் தினந்தோறும் தொடர்ந்து பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ந் தேதியில் இருந்து வருகி்ற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி செல்கிறது. பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவர்களை சிகிச்சைக்காக அனுமதிக்காமல் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.
இதனால் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே நோயாளிகள் படுத்துகிடப்பதாக மாவட்ட கலெக்டர் பா.பொன்னையாவுக்கு புகார் வந்தது.
திடீர் ஆய்வு
இந்த புகாரையடுத்து கலெக்டர் நேற்று முன்தினம் இரவு திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் முழு கவச உடை அணிந்து கொண்டு கொரோனா வார்டினை பார்வையிட்டார்.
அதில், ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளதா? எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளிகள் படுத்திருப்பதை கண்ட கலெக்டர் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டாக்டர்களை கடுமையாக சாடினார்.
மேலும் மாவட்டத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படுக்கை வசதிக்காக இந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் டி.டி.மருத்துவக் கல்லூரிகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அவருடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், மருத்துவர் ஜெகதீஸ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story